“எனக்கு செய்த பாவத்துக்குத்தான் இப்போது ஓ.பி.எஸ் அனுபவிக்கிறார்!” – கொதித்த வைகோ

172.jpg

சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, “எனக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செய்த தவறுக்காகவே இன்று அவர் அதற்கான பலனை அனுபவித்து வருகிறார்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு வைகோவின் கடும் விமர்சனம்

இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள், அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம், நடிகர் விஜயின் அரசியல் விமர்சனங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதில் பேசிய வைகோ, “கரூரில் தவெக கூட்ட நெரிசல் விபத்து நடந்த நிலையில், விஜய் திருச்சியில் கூட தங்காமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு அழைத்து வந்து துக்கம் கேட்டது பித்தலாட்டம். இது யாரும் செய்யாத அரசியல் நாடகம்,” என்று விமர்சித்தார்.

மேலும் அவர், “அரசியலில் ‘ஆத்திசூடி’ கூட அறியாதவர் விஜய். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முயற்சி செய்கிறார். முதலமைச்சர் ஆகும் கனவு அவருக்குப் பலிக்காது,” என கடுமையாக சாடினார்.

2011 கூட்டணியில் நடந்தது என்ன?

அடுத்து 2011 சட்டமன்றத் தேர்தல் குறித்து வைகோ கூறியதாவது:
“அந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் எனக்குப் பேச வந்தனர். 12 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என கூறினர். அதை நான் மறுத்தேன்.

பின்னர், ‘வைகோ கூட்டணியில் சேர மறுக்கிறார்’ என ஜெயலலிதாவிடம் பொய் சொன்னார்கள். ஆனால், பின்னர் ஜெயலலிதா எனக்கு 15 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கத் தயார் இருந்ததாகத் தெரியவந்தது. எனக்காக ஜெயலலிதா தனியாக எழுதிய கடிதமும், நேரில் வந்துப் பேசியதும் உண்மையே,” என வைகோ தெரிவித்தார்.

அவர் மேலும், “என்னால் அல்ல, சிலரின் சதி காரணமாகவே அதிமுக-மதிமுக கூட்டணி அமையாமல் போனது. இன்று வரை திமுகவை நேரடியாக விமர்சிக்காத ஒரே கட்சி மதிமுகதான்,” என கூறினார்.

பின்னணி

2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்தன. ஆனால், மதிமுகவிற்கு மிகக்குறைந்த தொகுதிகள் வழங்கப்பட்டதால், வைகோ கடுமையாக எதிர்த்தார். இதன் பின்னர் மதிமுக கூட்டணியில் இருந்து விலகி, அந்தத் தேர்தலை புறக்கணித்தது.

Summary :
Vaiko hits out at OPS saying he faces karma for past betrayal. Also mocks actor Vijay’s political ambitions and recalls 2011 AIADMK alliance twist.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *