நாமக்கல்:
தவெக தலைவர் விஜய் தனது 3வது கட்ட சுற்றுப்பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு வந்துள்ளார். இதனை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூடி உள்ளனர். கூட்ட நெரிசலால் காவல்துறையினர் கூட கட்டுப்படுத்த சிரமப்பட்டனர்.

விஜய்யை நேரில் காண பெண்கள், இளைஞர்கள் என பெரும்பான்மை ரசிகர்கள் திரண்டனர். விஜய் சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து கார் மூலம் நாமக்கலுக்குப் புறப்பட்டார்.
இந்த நேரத்தில், தவெக பெண் தொண்டர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது:
“நாமக்கல் எங்களின் சொந்த ஊர். திருச்சியில் விஜய் பேசும் போது மைக்கில் சத்தம் வரவில்லை. இம்முறை அவர் உரையை கேட்கவே வந்துள்ளேன். நேற்றிரவே நாமக்கல் வந்துவிட்டேன். கூட்டம் எல்லாம் வாக்காக மாறாது என்று சொல்கிறார்கள். ஆனால் 2026 தேர்தலில் எங்கள் வாக்கின் சக்தி தெரியும்.
நாங்கள் விஜய்க்கே வாக்களிப்போம். அவர் நிரந்தரமாக முதல்வர் நாற்காலியில் அமருவார். நாங்கள் கொள்கையோடு செயல்படும் கட்சி. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஒருநாள் முழுக்க விஜய்யை பார்க்க காத்திருக்கும் நாங்கள், ஓட்டுப்போட வரிசையில் ஒரு மணி நேரம் நிற்க மாட்டோமா? இதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.”
இந்த உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, தவெக தொண்டர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்துவதாக பரவலாக பேசப்படுகிறது.