சென்னை:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு தற்போது இசட் (Z) பிரிவாக மேம்படுத்தப்படும் என கூறப்பட்ட தகவல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு புலனாய்வு அறிக்கைகள் அடிப்படையில் ஒய், இசட், இசட் பிளஸ் போன்ற பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல், மத்திய ரிசர்வ் படையினரால் அமைக்கப்பட்ட 8 முதல் 11 பேர் கொண்ட ஆயுத கமாண்டோ குழு விஜய்க்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்த குழு விஜய்யின் பயணங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளில் அவரை நெருக்கமாக பாதுகாத்து வருகிறது.
ஆனால் சமீபத்தில் கரூர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு, மேலும் விஜய்யை நோக்கி காலணி வீசப்பட்ட சம்பவம் போன்றவற்றைத் தொடர்ந்து, அவரின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாக பலரும் சுட்டிக்காட்டினர். இதனால் “விஜய்க்கு ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்படலாம்” என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்,
“புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் விஜய்க்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலைமையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை,”எனத் தெரிவித்துள்ளது.அதாவது, விஜய்க்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கும், ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.