விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் தர்பூசணியில் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு தவறான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், கோடை வெயிலுக்கு இதமளிக்கும் தர்பூசணி விற்பனை மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானதால், தர்பூசணி விவசாயிகள் முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி, தர்பூசணி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், விக்கிரவாண்டி டோல் பிளாசா அருகே தர்பூசணி விற்பனை செய்து கொண்டிருந்த கடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது.
பொதுமக்களின் முன்னிலையில் தர்பூசணி பழங்கள் வெட்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இந்த ஆய்வுக்குப் பிறகு, ரசாயன கலப்படம் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
“தர்பூசணியில் செயற்கை நிறத்திற்காகவோ அல்லது சுவைக்காகவோ ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்பட்டால், அந்த ரசாயனம் 24 மணி நேரத்திற்குள் ஊசி செலுத்தப்பட்ட துவாரத்தின் வழியே வெளியேறிவிடும்.
அவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட பழத்தை வெட்டிப் பார்த்தால், உள்பகுதி கனிந்து இருக்காது, ஒருவிதமான மாறுபட்ட நிறத்தில் காணப்படும்.
கோடைக்காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை தர்பூசணியில் உள்ள லைக்கோபின் என்ற திரவம் சரிசெய்கிறது. மேலும், இது வெயிலினால் ஏற்படும் வெப்ப பக்கவாதத்தையும் (ஹீட் ஸ்ட்ரோக்) தடுக்கக்கூடியது.
எனவே, பொதுமக்கள் தர்பூசணியை எந்தவித அச்சமும் இன்றி தாராளமாக உட்கொள்ளலாம்” என்று அவர்கள் உறுதியளித்தனர்.
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொளஞ்சி, ஸ்டாலின், ராஜேந்திரன் மற்றும் ராஜரத்தினம் ஆகியோரும் உடனிருந்தனர்.
Summary : Food safety officials in Vikravandi, India, have reassured the public that watermelons are safe to eat, following concerns sparked by rumors of chemical adulteration. Public inspections were conducted to demonstrate the absence of harmful substances, and officials highlighted the natural hydrating and heat-protective properties of watermelons, encouraging consumers to buy and enjoy the fruit without any apprehension.