சென்னை: நடிகர் விஜய்யை சந்தித்து, ரகசிய அரசியல் விவாதம் நடத்தினேன்! – இது நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தமது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த கனவு பதிவு. ஆனால், இந்த பதிவு நிஜமாகும் முன்னோட்டமா? என்பதே தற்போதைய பரபரப்பு.நெட்டிசன்கள் “நடிகர் பார்த்திபன், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைவதற்கான அறிகுறியா இது?” என கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.
பார்த்திபனின் கனவு – நிஜமாக மாறுமா?
நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,
“நேற்றிரவு, என் பழைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான விஜய்யுடன் நீண்ட உரையாடல், பஜ்ஜியுடன் தேநீர், ரகசிய அரசியல் வியூகங்கள்… இதை செமையா பதிவு செய்ய ஒரு Selfie எடுக்கலாம் என்று பார்த்தேன். ஆனா… அது கனவு!” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள்” என்றும், “சமீபத்தில் விஜய் பற்றி பல கேள்விகள் வந்ததால் இது கனவில் வந்திருக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.
நிஜத்தில் தவெகவில் இணைவாரா? பார்த்திபனின் பதில்!
விஜய்யின் கட்சியில் சேர விருப்பமா? என்ற கேள்விக்கு “அப்படியில்லை நண்பா! இருந்தால் மௌனமாகவே இணைந்திருப்பேன்!” என்று பார்த்திபன் பதிலளித்துள்ளார்.ஆனால், அவரின் “நேற்றைய நண்பர் – இன்றைய தலைவர்” என்ற பகுதி, அவரும் விஜய்யை ஒரு “தலைவராக ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டாரா?” என்கிற சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசியல் மீது பார்த்திபனின் பார்வை!
சமீபத்தில் புதுச்சேரியில் பேசியபோது,
“அனைவருக்கும் அரசியல் வரவதற்கு தடை இல்லை. விஜய், அரசியல் தடைகளை கடந்து செல்ல வேண்டும்.”
“ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் முன்னேற முடியும். கருணாநிதி, எம்ஜிஆர் அதை செய்ததுண்டு.”
“விஜய் அழைத்தாலும், அவருடைய கட்சியில் சேர மாட்டேன்.”என்று பார்த்திபன் கூறியிருந்தார்.
சமூக வலைதளத்தில் வெடித்த விவாதம்!
நடிகர் பார்த்திபனின் கனவு பதிவு, விஜய்யின் அரசியல் பயணத்தில் அவரும் இணைவதற்கான சிக்னலா? அல்லது தனது அரசியல் பார்வையை வெளிப்படுத்தும் வெறும் ஒரு நகைச்சுவையான பதிவு மட்டுமா? என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நிஜத்தில் பார்த்திபன், விஜய் கட்சியில் இணைவாரா? அல்லது இது வெறும் ஒரு கனவா? – இதற்கான பதில் எதிர்காலத்தில்தான் தெரியும்.