நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரான் மம்தானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவர் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோவை தோற்கடித்து புதிய மேயராக தேர்வாகியுள்ளார். இதன்மூலம் நியூயார்க் அரசியலில் மம்தானி முக்கியமான இளம் தலைவராக உயர்ந்துள்ளார்.

உகாண்டாவில் பிறந்த மம்தானி, தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் வளர்ந்தார். ஏழாவது வயதில் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்த அவர், பின்னர் பெளடின் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவரது தந்தை மஹ்மூத் மம்தானி கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர். தாயார் பிரபல திரைப்பட இயக்குனர் மீரா நாயர்; ‘மான்சூன் வெட்டிங்’ மற்றும் ‘மிஸ்ஸிசிப்பி மசாலா’ போன்ற படங்களின் படைப்பாளர்.
அரசியலுக்குள் வரும் முன்பு மம்தானி ஒரு ராப் பாடகராகவும், “மிஸ்டர் கார்டமம்” என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவராகவும் இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அவரின் பழைய வீடியோக்கள் வைரலானபோதும், அவர் தன்னம்பிக்கையுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஜனநாயக சோசியலிஸ்ட் கட்சியின் தலைவரான 34 வயதான மம்தானி, உழைக்கும் வர்க்கத்திற்காகப் பாடுபடும் எளிமையான தலைவராக திகழ்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1.71 கோடி மட்டுமே என கூறப்படுகிறது. கார் கூட இல்லாமல், மெட்ரோ ரயிலில் பயணித்து வாடகை வீட்டில் வசிக்கும் அவர், சாதாரண மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நம்பிக்கையின் சின்னமாக மாறியுள்ளார்.
மம்தானி தனது பிரச்சாரத்தின் போது பேருந்து மற்றும் குழந்தைப் பராமரிப்பு இலவசம், நகர மளிகைக் கடைகள் போன்ற மக்கள் நலக் கொள்கைகளை வலியுறுத்தினார். அந்த முற்போக்குச் செயல்திட்டங்களே இன்று அவரை நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக உயர்த்தியுள்ளது.
Summary :
Indian-origin Zohran Mamdani wins NYC mayoral election, defeating Andrew Cuomo. His progressive vision and humble roots inspired voters.








